Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:16

[1] யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; எல்லாத் தலைமுறைகளுக்கும் உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.

[2] உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.

[3] “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.

[4] ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” என்று நீர் சொன்னீர்.

[5] யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.

[6] மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?

[7] பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர்.

[8] சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

[9] பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர்.

[10] நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர்.

[11] வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.

[12] வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.

[13] உமது புயம் வலிமைமிக்கது; உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.

[14] நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.

[15] யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

[16] அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள்.

[17] நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.

[18] உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.

[19] நீர் ஒருமுறை தரிசனத்தில், உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.

[20] நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.

[21] என் கரம் அவனைத் தாங்கும்; நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

[22] பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.

[23] நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.

[24] என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; என் பெயரால் அவன் பலம் உயரும்.

[25] நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.

[26] அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.

[27] நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.

[28] நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.

[29] நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.

[30] “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,

[31] என் விதிமுறைகளை மீறி, எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,

[32] நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;

[33] ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.

[34] நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.

[35] ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:

[36] அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;

[37] அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”

[38] ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர்.

[39] உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.

[40] நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர்.

[41] கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான்.

[42] நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர்.

[43] நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர்.

[44] நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.

[45] நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.

[46] யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்?

[47] என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்!

[48] மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்?

[49] யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே?

[50] யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும்.

[51] யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.

[52] யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! ஆமென், ஆமென்.

சங்கீதம் — Chapters