Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:41

[1] யெகோவாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

[2] என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்; என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும்.

[3] உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும், ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்; ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள்.

[4] யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; உமது பாதைகளை எனக்குப் போதியும்.

[5] உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். நீரே என் இரட்சகராகிய இறைவன், நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன்.

[6] யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே.

[7] என் வாலிப காலத்தின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினைக்கவேண்டாம்; உமது உடன்படிக்கையின் அன்பின்படி என்னை நினைத்துக்கொள்ளும், யெகோவாவே, நீர் நல்லவர்.

[8] யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்குத் தமது வழிகளை அறிவுறுத்துகிறார்.

[9] அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார், தமது வழியை அவர்களுக்குப் போதிக்கிறார்.

[10] யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவருடைய பாதைகளெல்லாம் உடன்படிக்கையின் அன்பும் நம்பகமுமானவைகள்.

[11] யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும், உமது பெயரின் நிமித்தம் அதை மன்னியும்.

[12] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்? அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழியை யெகோவா அவர்களுக்கு அறிவுறுத்துவார்.

[13] அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள், அவர்களுடைய சந்ததி பூமியை தமக்கு சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

[14] யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது; அவர் தமது உடன்படிக்கையையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

[15] என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன; ஏனென்றால் என் கால்களை அவரே கண்ணியிலிருந்து விடுவிப்பார்.

[16] யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்; நான் தனிமையிலும் துன்பத்திலும் இருக்கிறேன்.

[17] என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும்.

[18] என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

[19] என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள்.

[20] என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை வெட்கப்பட விடாதேயும்.

[21] உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்; ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது.

[22] இறைவனே, இஸ்ரயேலை அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.

சங்கீதம் — Chapters