[1] இறைவனே, உமது அன்பின் நிமித்தம் எனக்கு இரக்கம் காட்டும், உமது பெரிதான கருணையின் நிமித்தம் என் மீறுதல்களை நீக்கிவிடும்.
[2] என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும்.
[3] என் மீறுதல்களை நான் அறிவேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
[4] உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்; உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்; ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர், உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர்.
[5] நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்; என் தாய் என்னைக் கர்ப்பந்தரித்ததில் இருந்தே நான் பாவியாய் இருக்கிறேன்.
[6] ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்; அந்த மறைவான இடத்திலிருந்தே நீர் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
[7] ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன்.
[8] நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும்.
[9] என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து, என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும்.
[10] இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும்.
[11] உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
[12] உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும்.
[13] அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள்.
[14] இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். எனது நாவு உமது நீதியைப் பாடும்.
[15] யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
[16] நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை.
[17] இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை நீர் புறக்கணிக்கமாட்டீர்.
[18] உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.
[19] அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும், சர்வாங்க தகன காணிக்கையான நீதி பலிகளிலும் நீர் மகிழ்ச்சியடைவீர்; உமது பலிபீடத்தின்மேல் காளைகளை அர்ப்பணிப்பார்கள்.