Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:01

[1] எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது அன்பின் நிமித்தமும், உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.

[2] பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள்.

[3] நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.

[4] ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.

[5] அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.

[6] அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.

[7] அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.

[8] அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

[9] இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

[10] ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

[11] அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

[12] யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

[13] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.

[14] யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.

[15] வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.

[16] மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.

[17] இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.

[18] இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

சங்கீதம் — Chapters