Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:29

[1] என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும்.

[2] இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள்.

[3] என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால்,

[4] என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால்,

[5] அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; அவன் என்னைத் தரையில் தள்ளி, உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.

[6] யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும்.

[7] எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும்.

[8] யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும்.

[9] சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற நீதியுள்ள இறைவனே, கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும்.

[10] மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார்.

[11] இறைவன் நீதியுள்ள நீதிபதி; அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.

[12] கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.

[13] அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.

[14] தீமையினால் நிறைந்தவர்களோ பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

[15] மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, தாங்களே அதற்குள் விழுகிறார்கள்.

[16] அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது.

[17] யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதம் — Chapters