Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:50

[1] நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.

[2] நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.

[3] இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.

[4] நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.

[5] முந்தின நாட்களையும், கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;

[6] நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:

[7] “யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?

[8] அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?

[9] இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”

[10] அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், எனக்காக செயலாற்றுகிறது,

[11] யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.

[12] உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.

[13] இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?

[14] அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.

[15] உமது வல்லமையுள்ள புயத்தினால் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.

[16] இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; மகா ஆழங்களும் நடுங்கின.

[17] மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.

[18] உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; பூமி நடுங்கி அதிர்ந்தது.

[19] உமது பாதை கடலிலும், உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.

[20] மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.

சங்கீதம் — Chapters