Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:25

[1] யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.

[2] உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.

[3] உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

[4] நான் தாங்கமுடியாத சுமையைப்போல என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.

[5] என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

[6] நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.

[7] எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; என் உடலில் சுகமே இல்லை.

[8] நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.

[9] யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.

[10] என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.

[11] எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.

[12] என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.

[13] நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

[14] காது காதுகேட்காதவனும், தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.

[15] யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.

[16] “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.

[17] நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

[18] என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.

[19] காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.

[20] நான் நன்மையானதைச் செய்தபோதும், நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.

[21] யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.

[22] என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

சங்கீதம் — Chapters