Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:42

[1] ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ? மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?

[2] இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்; உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.

[3] கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.

[4] அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.

[5] இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.

[6] இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.

[7] ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.

[8] நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல, சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.

[9] முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே, பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல கொடியவர்களை வாரிக்கொள்ளும்.

[10] அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்; கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.

[11] அப்பொழுது மனிதர், “நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும் பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.

சங்கீதம் — Chapters