[1] இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
[2] யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
[3] யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
[4] ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
[5] இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
[6] நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
[7] இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
[8] கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல்.
[9] மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
[10] அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
[11] இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
[12] பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
[13] இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.