Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:32

[1] யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக.

[2] நான் துன்பத்தில் இருக்கும்போது உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி, விரைவாய் எனக்குப் பதிலளியும்.

[3] என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன; என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன.

[4] என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று; நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன்.

[5] என் உரத்த பெருமூச்சினால் நான் எலும்பும் தோலுமானேன்;

[6] நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன்.

[7] நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்; நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன்.

[8] என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள்.

[9] நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன்.

[10] உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன். நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர்.

[11] என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது; நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன்.

[12] ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.

[13] நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம், நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது.

[14] சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன; அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள்.

[15] நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்; பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள்.

[16] யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி, தம் மகிமையில் காட்சியளிப்பார்.

[17] ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்; அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.

[18] இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:

[19] “யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி,

[20] அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.”

[21] ஆகையால் மக்களும் அரசுகளும் யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது,

[22] சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும்.

[23] யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; என் நாட்களையும் குறுகச்செய்தார்.

[24] அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது, “இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்; உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே.

[25] நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன.

[26] அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்; உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

[27] நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர், உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.

[28] உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்; அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்.”

சங்கீதம் — Chapters