[1] பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
[2] யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
[3] யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; மகிமையின் இறைவன் முழங்குகிறார்; பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
[4] யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
[5] யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
[6] அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், சிரியோன் மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
[7] யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
[8] யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
[9] யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. காடுகளை அழித்து வெளியாக்குகிறது; அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
[10] யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
[11] யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.