[1] இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.
[2] ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும்
[3] கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.
[4] ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.
[5] இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.
[6] நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.
[7] சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
[8] யெகோவாவினுடைய செயல்களையும் அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.
[9] யெகோவா பூமியின் கடைசிவரை யுத்தங்களை நிறுத்துகிறார்; அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.
[10] யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”
[11] சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.