Skip to content
Opens in a new window
Listen to this chapter • 19:23

[1] குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

[2] அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

[3] அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

[4] நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர்.

[5] ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.

[6] உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.

[7] உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.

[8] நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். ב பேத்

[9] வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.

[10] நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.

[11] நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.

[12] யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.

[13] உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.

[14] ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.

[15] நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.

[16] நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். ג கிமெல்

[17] உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.

[18] உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும்.

[19] பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.

[20] உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.

[21] அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.

[22] நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.

[23] ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.

[24] உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன. ד டாலெத்

[25] நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.

[26] நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.

[27] உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன்.

[28] என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும்.

[29] என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.

[30] மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன்.

[31] யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்.

[32] நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன். ה ஹெ

[33] யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன்.

[34] விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.

[35] உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

[36] என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும்.

[37] பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.

[38] உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும்.

[39] நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.

[40] நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். ו வெள

[41] யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;

[42] அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

[43] சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

[44] நான் எப்பொழுதும் உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன்.

[45] உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், நான் சுதந்திரமாக நடந்துவருவேன்.

[46] நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன்.

[47] ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன்.

[48] நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன். ז சயின்

[49] உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர்.

[50] இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது.

[51] அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை.

[52] யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன்.

[53] உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது.

[54] நான் எங்கு தங்கினாலும், உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று.

[55] யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.

[56] உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே என் வழக்கமாயிற்று. ח கேத்

[57] யெகோவாவே, நீரே என் பங்கு; உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன்.

[58] நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும்.

[59] நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

[60] உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், தாமதிக்கமாட்டேன்.

[61] கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், நான் உமது சட்டத்தை மறவேன்.

[62] உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.

[63] உமக்குப் பயந்து நடக்கிற, உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.

[64] யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். ט தேத்

[65] யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி உமது அடியேனுக்கு நன்மை செய்யும்.

[66] உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும்.

[67] நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்.

[68] நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும்.

[69] அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன்.

[70] அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன்.

[71] நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன்.

[72] ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது. י யோத்

[73] உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.

[74] நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக.

[75] யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான்.

[76] நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.

[77] நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; உமது சட்டம் என் மனமகிழ்ச்சி.

[78] காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.

[79] உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும்.

[80] நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும். כ காஃப்

[81] உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

[82] உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன்.

[83] நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன்.

[84] உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்?

[85] அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; அது உமது சட்டத்திற்கு முரணானது.

[86] உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும்.

[87] அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை.

[88] உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும், அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன். ל லாமேத்

[89] யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது.

[90] உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.

[91] உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன.

[92] உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன்.

[93] நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர்.

[94] நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன்.

[95] கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன்.

[96] பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. מ மேம்

[97] ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.

[98] உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது.

[99] நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.

[100] நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன்.

[101] உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்;

[102] நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர்.

[103] உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை.

[104] உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். נ நூன்

[105] உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.

[106] உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்.

[107] நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

[108] யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும்.

[109] என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன்.

[110] கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை.

[111] உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி.

[112] உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. ס சாமெக்

[113] இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன்.

[114] நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

[115] அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்!

[116] உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் வாழ்வடைவேன்; என் நம்பிக்கை வீண்போக விடாதேயும்.

[117] என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன்.

[118] உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது.

[119] பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன்.

[120] உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். ע அயின்

[121] நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும்.

[122] உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும்.

[123] உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன.

[124] உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.

[125] நான் உமது பணியாளன்; உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும்.

[126] யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது.

[127] உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும்,

[128] உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன். פ பெ

[129] உமது நியமங்கள் ஆச்சரியமானவை, ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.

[130] உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன.

[131] நான் உமது கட்டளைகளை விரும்பி, என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன்.

[132] உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்.

[133] உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும்.

[134] மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன்.

[135] உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.

[136] மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. צ த்சாதெ

[137] யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; உமது சட்டங்கள் நியாயமானவை.

[138] நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; அவை முற்றும் நம்பத்தகுந்தவை.

[139] என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது.

[140] உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன்.

[141] நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன்.

[142] உமது நீதி நித்தியமானது, உமது சட்டம் உண்மையானது.

[143] கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன.

[144] உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன். ק கோஃப்

[145] யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; எனக்குப் பதில் தாரும், நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்.

[146] நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன்.

[147] விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

[148] உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.

[149] நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

[150] கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள்.

[151] என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; உமது கட்டளைகள் எல்லாம் உண்மை.

[152] உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன். ר ரேஷ்

[153] என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை.

[154] எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

[155] இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை.

[156] யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

[157] என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை.

[158] துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை.

[159] நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

[160] உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. ש ஷீன்

[161] ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது.

[162] பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

[163] நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன்.

[164] நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.

[165] உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

[166] யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன்.

[167] நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன்.

[168] நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன. ת தெள

[169] யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும்.

[170] என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும்.

[171] எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர்.

[172] எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை.

[173] உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

[174] யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; உமது சட்டம் எனது மகிழ்ச்சி.

[175] நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.

[176] காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; உமது அடியேனைத் தேடுவீராக; ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

சங்கீதம் — Chapters