Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:03

[1] யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.

[2] அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

[3] அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

[4] யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.

[5] அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.

[6] அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள்.

[7] அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.

[8] அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,

[9] ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார்.

[10] அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது:

[11] “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”

[12] அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,

[13] அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள்.

[14] அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:

[15] “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”

[16] எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்;

[17] அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார்.

[18] எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது.

[19] அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது.

[20] எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான்.

[21] அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான்.

[22] தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான்.

[23] அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான்.

[24] யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார்.

[25] அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார்.

[26] அவர் தமது அடியானாகிய மோசேயையும், தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

[27] இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள்.

[28] யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார்.

[29] அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது.

[30] அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன.

[31] இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன.

[32] அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார்.

[33] அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.

[34] அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் வந்தன.

[35] அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது.

[36] பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார்.

[37] அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை.

[38] இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள்.

[39] யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார்.

[40] அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார்.

[41] அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது.

[42] ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார்.

[43] அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார்.

[44] அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

[45] அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, யெகோவா இப்படிச் செய்தார். அல்லேலூயா.

சங்கீதம் — Chapters