Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:28

[1] யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.

[2] என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.

[3] என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

[4] நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்; நான் பெலனற்ற மனிதனைப்போல் இருக்கிறேன்.

[5] நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்; நீர் இனி எப்போதும் உம்மால் நினைவுகூரப்படாமல் உமது கவனத்திலிருந்து அகற்றப்பட்டு, பாதாளத்தில் அழிக்கப்பட்டவர்கள்போல் ஆனேன்.

[6] நீர் என்னை மிகுந்த இருளில், ஆழம் மிகுந்த படுகுழியில் போட்டுவிட்டீர்.

[7] உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது; உமது அலைகள் எல்லாவற்றினாலும் நீர் என்னை மூடிவிட்டீர்.

[8] என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி, என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்; நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன்.

[9] என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன. யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன்.

[10] இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ? இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?

[11] பிரேதக்குழியில் உமது அன்பும், அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?

[12] உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?

[13] ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.

[14] யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?

[15] என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்; நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன்.

[16] உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது; உமது திகில் என்னைத் தாக்குகிறது.

[17] அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; என்னை அவை முழுமையாய் வளைத்துக்கொண்டன.

[18] நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது.

சங்கீதம் — Chapters