Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:49

[1] யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,

[2] பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

[3] காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.

[4] யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.

[5] யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

[6] மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.

[7] துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

[8] யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.

[9] யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.

[10] என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.

[11] என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.

[12] நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

[13] யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.

[14] யெகோவா உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,

[15] அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

சங்கீதங்கள் — Chapters