Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:40

[1] தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?

[2] யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:

[3] அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.

[4] பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

[5] அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.

[6] நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.

[7] தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;

[8] என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

[9] இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

[10] இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.

[11] பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.

[12] தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, தேவனை முத்தம்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

சங்கீதங்கள் — Chapters