Skip to content
Opens in a new window
Listen to this chapter • 19:22

[1] யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.

[2] அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

[3] அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

[4] உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.

[5] உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.

[6] நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.

[7] உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

[8] உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். பேத்.

[9] வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.

[10] என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.

[11] நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.

[12] யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

[13] உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.

[14] திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.

[15] உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.

[16] உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.

[17] உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.

[18] உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.

[19] பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.

[20] உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.

[21] உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.

[22] நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.

[23] அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.

[24] உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத்.

[25] என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

[26] என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

[27] உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

[28] துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

[29] பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

[30] மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

[31] உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.

[32] நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ.

[33] யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

[34] எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

[35] உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.

[36] என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.

[37] மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

[38] உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.

[39] நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

[40] இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ.

[41] யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

[42] அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

[43] சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

[44] நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

[45] நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.

[46] நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

[47] நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.

[48] நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன்.

[49] நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

[50] அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.

[51] பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

[52] யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

[53] உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.

[54] நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.

[55] யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

[56] நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது. ஹெத்.

[57] யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

[58] முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.

[59] என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

[60] உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.

[61] துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.

[62] உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.

[63] உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.

[64] யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத்.

[65] யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.

[66] உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.

[67] நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.

[68] தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

[69] பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

[70] அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.

[71] நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

[72] அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட்.

[73] உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

[74] நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

[75] யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

[76] நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.

[77] நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.

[78] பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

[79] உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.

[80] நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப்.

[81] உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.

[82] எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.

[83] புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

[84] உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?

[85] உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

[86] உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும்.

[87] அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

[88] உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். லாமேட்.

[89] யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

[90] உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.

[91] உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.

[92] உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

[93] நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

[94] நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

[95] துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

[96] நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம்.

[97] உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.

[98] நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

[99] உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.

[100] உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.

[101] உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.

[102] நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.

[103] உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.

[104] உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.

[105] உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.

[106] உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

[107] நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

[108] யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

[109] என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.

[110] துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.

[111] உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.

[112] முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக்.

[113] வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

[114] என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.

[115] பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

[116] நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.

[117] என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.

[118] உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.

[119] பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

[120] உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின்.

[121] நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.

[122] உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.

[123] உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.

[124] உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

[125] நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

[126] நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.

[127] ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

[128] எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.

[129] உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.

[130] உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.

[131] உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

[132] உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.

[133] உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.

[134] மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.

[135] உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

[136] உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.

[137] யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

[138] நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.

[139] என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.

[140] உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

[141] நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

[142] உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

[143] துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.

[144] உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப்.

[145] முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

[146] உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

[147] அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.

[148] உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.

[149] உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.

[150] தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.

[151] யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.

[152] நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். ரேஷ்.

[153] என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.

[154] எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

[155] இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.

[156] யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

[157] என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.

[158] உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.

[159] இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

[160] உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.

[161] அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

[162] மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.

[163] பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

[164] உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.

[165] உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.

[166] யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

[167] என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

[168] உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள.

[169] யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

[170] என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.

[171] உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.

[172] உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

[173] நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.

[174] யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.

[175] என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.

[176] காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.

சங்கீதங்கள் — Chapters