Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:56

[1] தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

[2] உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

[3] எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.

[4] எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.

[5] எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?

[6] உம்மை அறியாத தேசங்கள் மேலும், உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.

[7] அவர்கள் யாக்கோபை அழித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.

[8] முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

[9] எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, உமது பெயருக்காக எங்களை விடுவித்து, எங்களுடைய பாவங்களை மன்னியும்.

[10] அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்? உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல் தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

[11] கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.

[12] ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.

[13] அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

சங்கீதங்கள் — Chapters