Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:00

[1] எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.

[2] அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?

[3] நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.

[4] அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

[5] அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

[6] அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

[7] அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

[8] அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

[9] இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

[10] ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

[11] யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

[12] யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.

[13] யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.

[14] யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.

[15] வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

[16] வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.

[17] இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.

[18] நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.

சங்கீதங்கள் — Chapters