Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:36

[1] என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

[2] எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

[3] சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,

[4] சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.

[5] உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

[6] உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

[7] நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

[8] தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

[9] உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

[10] மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

[11] அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

[12] தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

[13] இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.

[14] வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

[15] அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.

[16] உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

[17] உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.

சங்கீதங்கள் — Chapters