Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:19

[1] யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.

[2] என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.

[3] ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

[4] உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

[5] ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

[6] யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.

[7] நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

[8] ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.

[9] ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.

[10] தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

[11] யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

[12] என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

[13] நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

[14] தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.

[15] ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

[16] என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.

[17] யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதங்கள் — Chapters