Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:20

[1] நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.

[2] சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.

[3] அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.

[4] யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

[5] அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.

[6] யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.

[7] அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

[8] பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

[9] அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

[10] யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.

[11] யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

[12] யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.

[13] யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.

[14] தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.

[15] அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

[16] எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.

[17] காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.

[18] தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

[19] பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.

[20] நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

[21] அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.

[22] யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

சங்கீதங்கள் — Chapters