[1] தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.
[2] தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
[3] அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
[4] தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக.
[5] உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
[6] என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை.
[7] நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
[8] தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
[9] நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
[10] எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
[11] நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
[12] நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
[13] எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
[14] நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.
[15] நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
[16] என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
[17] இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.
[18] நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
[19] எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
[20] நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
[21] தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
[22] உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
[23] ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.
[24] ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
[25] எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
[26] எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.