Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:15

[1] யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.

[2] யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.

[3] இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

[4] அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.

[5] நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

[6] யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.

[7] யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.

[8] அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.

[9] அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

[10] அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.

[11] தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.

[12] எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.

[13] அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

[14] அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

[15] அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.

[16] பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.

[17] அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

[18] அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.

[19] யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

[20] அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.

சங்கீதங்கள் — Chapters