Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:52

[1] யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

[2] அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.

[3] அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

[4] அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

[5] நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

[6] யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?

[7] எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

[8] மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

[9] பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

[10] எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

[11] என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

[12] தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

[13] நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.

[14] யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

[15] நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

[16] யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

[17] நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.

[18] யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

[19] நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.

[20] யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.

[21] நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.

[22] வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.

[23] அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

[24] இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.

[25] யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.

[26] யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

[27] யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

[28] நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

[29] யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் — Chapters