[1] யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
[2] கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.
[3] என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
[4] என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
[5] யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
[6] வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
[7] தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
[8] சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
[9] தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
[10] நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
[11] வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
[12] வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
[13] உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது.
[14] நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
[15] கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
[16] அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
[17] நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
[18] யெகோவாவால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
[19] அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
[20] என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
[21] என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
[22] எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
[23] அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
[24] என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
[25] அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
[26] அவன் என்னை நோக்கி: நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
[27] நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
[28] என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
[29] அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.
[30] அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், என்னுடைய வேதத்தை விட்டு விலகி;
[31] என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
[32] அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
[33] ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
[34] என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
[35] ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.
[36] அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
[37] சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
[38] ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.
[39] உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
[40] அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
[41] வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
[42] அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
[43] அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
[44] அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
[45] அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
[46] எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
[47] என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
[48] மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
[49] ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
[50] ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
[51] யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
[52] யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். ஆமென். ஆமென்.