Skip to content
Opens in a new window

[1] என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.

[2] யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.

[3] துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.

[4] மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.

[5] பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.

[6] எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது.

[7] அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.

[8] அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

[9] வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

[10] கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.

[11] இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.

[12] அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.

[13] யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.

[14] தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.

[15] அப்பொழுது யெகோவாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.

[16] உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.

[17] என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

[18] என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.

[19] என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

[20] யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.

[21] ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.

[22] அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.

[23] உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

[24] ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.

[25] தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;

[26] புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

[27] தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

[28] தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.

[29] உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

[30] தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.

[31] யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?

[32] என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.

[33] அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.

[34] வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

[35] உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.

[36] என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

[37] என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.

[38] அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.

[39] போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.

[40] நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

[41] அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.

[42] நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

[43] மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.

[44] அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.

[45] அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.

[46] யெகோவா உயிருள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.

[47] அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

[48] அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.

[49] இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.

[50] தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.

சங்கீதங்கள் — Chapters