Skip to content
Opens in a new window

[1] நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.

[2] துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.

[3] பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.

[4] என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.

[5] நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

[6] அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.

[7] அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.

[8] அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.

[9] அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.

[10] அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.

[11] கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.

[12] அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.

[13] அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.

[14] அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.

[15] அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.

[16] அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

[17] சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.

[18] சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

[19] அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.

[20] இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.

[21] ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

[22] நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.

[23] சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

[24] உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.

[25] நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.

[26] என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.

[27] இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

[28] அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.

[29] என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.

[30] யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

[31] தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.

சங்கீதங்கள் — Chapters