Skip to content
Opens in a new window

[1] யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.

[2] உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது.

[3] உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

[4] என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.

[5] என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

[6] நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

[7] என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை.

[8] நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

[9] ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.

[10] என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.

[11] என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

[12] என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

[13] நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

[14] காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.

[15] யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.

[16] அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.

[17] நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

[18] என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.

[19] என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

[20] நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

[21] யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.

[22] என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

சங்கீதங்கள் — Chapters