Skip to content
Opens in a new window

[1] யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

[2] அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

[3] அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

[4] யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.

[5] அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!

[6] அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

[7] அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

[8] ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,

[9] அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

[10] அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

[11] உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

[12] அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.

[13] அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.

[14] அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

[15] நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

[16] அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.

[17] அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

[18] அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.

[19] யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

[20] ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.

[21] தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

[22] அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.

[23] அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.

[24] அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.

[25] தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

[26] தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

[27] இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

[28] அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.

[29] அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.

[30] அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

[31] அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

[32] அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.

[33] அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

[34] அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

[35] அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

[36] அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.

[37] அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

[38] எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

[39] அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.

[40] இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

[41] கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.

[42] அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

[43] தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,

[44] தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

[45] அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

சங்கீதங்கள் — Chapters