[1] யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
[2] யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
[3] கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.
[4] அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
[5] பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.
[6] தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
[7] வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
[8] தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
[9] அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
[10] தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
[11] காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
[12] அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
[13] தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
[14] காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
[15] யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
[16] அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
[17] புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
[18] அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
[19] தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
[20] அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
[21] அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
[22] நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
[23] கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
[24] அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
[25] அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
[26] அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
[27] குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
[28] அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
[29] கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
[30] அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
[31] அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
[32] மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
[33] அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
[34] குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
[35] அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
[36] பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
[37] வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
[38] அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
[39] பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
[40] அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
[41] எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
[42] உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
[43] எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.