Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:33

[1] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

[2] “நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

[3] தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ?

[4] உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

[5] நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து,

[6] சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.

[7] உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

[8] ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

[9] நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

[10] அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

[11] சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?

[12] அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?

[13] தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.

[14] அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.

[15] ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.

[16] வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;

[17] அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.

[18] அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.

[19] இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.

[20] இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

[21] இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

[22] உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.

யோபு — Chapters