[1] இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
[2] நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
[3] சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
[4] நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.
[5] நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
[6] நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
[7] நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ?
[8] அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
[9] அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?
[10] நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
[11] அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
[12] உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
[13] நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
[14] நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
[15] அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.
[16] அவரே என் பாதுகாப்பு; மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.
[17] என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
[18] இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
[19] என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
[20] இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
[21] உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.
[22] நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
[23] என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
[24] நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?
[25] காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
[26] மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர்.
[27] என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
[28] இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.