Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:22

[1] யோபு மறுமொழியாக:

[2] “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

[3] இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.

[4] நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.

[5] நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,

[6] தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

[7] இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.

[8] நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

[9] என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.

[10] அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.

[11] அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.

[12] அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.

[13] என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.

[14] என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.

[15] என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.

[16] நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

[17] என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.

[18] சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

[19] என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

[20] என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

[21] என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

[22] தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?

[23] ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,

[24] அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

[25] என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

[26] இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

[27] அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.

[28] காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.

[29] பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.

யோபு — Chapters