Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:23

[1] பின்னும் எலிகூ மறுமொழியாக:

[2] “ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

[3] வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.

[4] நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.

[5] யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,

[6] நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

[7] யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,

[8] அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்?

[9] எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.

[10] ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அநீதி தேவனுக்கும், சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது.

[11] மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார்.

[12] தேவன் அநியாயம் செய்யாமலும், சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.

[13] பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்?

[14] அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.

[15] அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.

[16] உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.

[17] நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?

[18] ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?

[19] இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.

[20] இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.

[21] அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

[22] அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, மரணஇருளுமில்லை.

[23] மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.

[24] ஆராய்ந்து முடியாதவிதத்தில், நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார்.

[25] அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.

[26] அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும்,

[27] எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர்,

[28] எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

[29] மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,

[30] ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?

[31] நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.

[32] நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் செய்தேனென்றால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.

[33] நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.

[34] யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,

[35] புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.

[36] அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை.

[37] தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.

யோபு — Chapters