Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:23

[1] அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:

[2] “ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?

[3] நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?

[4] அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?

[5] உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?

[6] காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.

[7] மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.

[8] பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.

[9] விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.

[10] ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.

[11] நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.

[12] தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.

[13] நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?

[14] அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.

[15] அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?

[16] காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.

[17] தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

[18] ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.

[19] எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.

[20] குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.

[21] நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.

[22] அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

[23] நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.

[24] அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.

[25] அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.

[26] அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.

[27] நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

[28] நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.

[29] மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.

[30] குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.

யோபு — Chapters