[1] “லிவியாதானை தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ?
[2] அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ?
[3] அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ?
[4] அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ?
[5] ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், நீ அதனுடன் விளையாடி, அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ?
[6] மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
[7] நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
[8] அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
[9] இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
[10] அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
[11] தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
[12] அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
[13] அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
[14] அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
[15] முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
[16] அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
[17] அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
[18] அது தும்மும்போது ஒளி வீசும், அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது.
[19] அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, நெருப்புப்பொறிகள் பறக்கும்.
[20] கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
[21] அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து தணல் புறப்படும்.
[22] அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் நடனமாடும்.
[23] அதின் உடல் அடுக்குகள், அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
[24] அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
[25] அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
[26] அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
[27] அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
[28] அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
[29] அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
[30] அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.
[31] அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
[32] அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
[33] பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
[34] அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.