Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:13

[1] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

[2] “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

[3] நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?

[4] கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?

[5] துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.

[6] அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.

[7] அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.

[8] அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.

[9] கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

[10] அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

[11] சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.

[12] அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.

[13] அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.

[14] அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.

[15] அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.

[16] கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.

[17] அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.

[18] அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

[19] அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.

[20] அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.

[21] அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.

யோபு — Chapters