[1] ஞானம் அழைக்கிறதில்லையோ? புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ?
[2] அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது.
[3] அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது:
[4] “மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன்.
[5] அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள்.
[6] கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும்.
[7] உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது.
[8] என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை.
[9] பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை.
[10] வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு.
[11] ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல.
[12] “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது.
[13] தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன்.
[14] ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு.
[15] என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள்.
[16] என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள்.
[17] என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள்.
[18] என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன.
[19] என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது.
[20] நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன்.
[21] என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன்.
[22] “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்;
[23] நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன்.
[24] சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை.
[25] மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே நான் பிறந்திருந்தேன்.
[26] அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன்.
[27] அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன்.
[28] அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன்.
[29] கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன்.
[30] அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து, எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன்.
[31] அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
[32] “ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; எனது வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
[33] எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்; அதை அலட்சியம் செய்யவேண்டாம்.
[34] நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
[35] என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.
[36] ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்; என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தையே விரும்புகிறார்கள்.”