[1] அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.
[2] நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.
[3] தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.
[4] நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.
[5] நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.
[6] கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும்.
[7] கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும்.
[8] ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.
[9] உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.
[10] நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை.
[11] தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள்.
[12] தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.
[13] தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள்.
[14] ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார்.
[15] மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
[16] மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
[17] நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.
[18] முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
[19] உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
[20] தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு.
[21] நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.
[22] பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
[23] விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
[24] சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.
[25] கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
[26] நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.
[27] சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.
[28] நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அப்பாதையில் மரணம் இல்லை.