Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:01

[1] என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.

[2] என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்.

[3] அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.

[4] ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல்.

[5] அவை உன்னை விபசாரியிடமிருந்தும், மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.

[6] நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று திரை வழியேப் பார்த்தேன்.

[7] அப்பொழுது அறிவில்லாத இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற ஒரு வாலிபனைக் கண்டேன்.

[8] அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான்.

[9] அது பொழுதுபட்டு மாலைமங்கி இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது.

[10] அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய், தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள்.

[11] அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை.

[12] அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள், மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள்.

[13] அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமில்லாத முகத்துடனே அவனிடம்:

[14] “நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி, இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன்.

[15] அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்; நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன்.

[16] நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன்.

[17] நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன்.

[18] வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!

[19] எனது கணவன் வீட்டில் இல்லை; அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான்.

[20] அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள்.

[21] இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.

[22] உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் வலையில் விழப்போகும் மானைப்போலவும்

[23] தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.

[24] ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.

[25] உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்; அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள்.

[26] அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்; அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம்.

[27] அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது.

நீதிமொழிகள் — Chapters