[1] பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
[2] நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
[3] நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
[4] அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
[5] ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
[6] நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
[7] ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
[8] நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
[9] அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
[10] என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
[11] நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
[12] நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
[13] அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
[14] கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
[15] அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
[16] ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
[17] அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
[18] நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
[19] ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
[20] என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
[21] அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
[22] அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
[23] எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
[24] வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
[25] உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
[26] உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
[27] நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.