Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:22

[1] திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.

[2] அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.

[3] சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.

[4] சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.

[5] மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.

[6] அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?

[7] நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

[8] நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.

[9] “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?

[10] பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.

[11] சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.

[12] கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.

[13] தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.

[14] பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.

[15] தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.

[16] பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.

[17] மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.

[18] நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.

[19] புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.

[20] ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.

[21] ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.

[22] “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.

[23] போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.

[24] மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?

[25] முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.

[26] ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.

[27] மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.

[28] அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.

[29] வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.

[30] அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.

நீதிமொழிகள் — Chapters