Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:47

[1] இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.

[2] மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.

[3] உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார்.

[4] யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்; பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார்.

[5] இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்; அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம்.

[6] அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும்.

[7] ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார்.

[8] அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது.

[9] மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.

[10] அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது.

[11] நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது.

[12] அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது.

[13] நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.

[14] அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது, ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள்.

[15] அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது; அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது.

[16] தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும் வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது!

[17] நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்.

[18] அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது.

[19] பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது.

[20] அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

[21] இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்; இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும்.

[22] விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது, ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது.

[23] ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும்.

[24] கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.

[25] மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.

[26] தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும்.

[27] இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும்.

[28] வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.

[29] வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி, தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள்.

[30] கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள்.

[31] நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.

[32] பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.

[33] சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.

நீதிமொழிகள் — Chapters