Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:46

[1] நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.

[2] மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.

[3] கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும்.

[4] வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.

[5] கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.

[6] மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.

[7] மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.

[8] புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.

[9] தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன்.

[10] யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.

[11] பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.

[12] வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.

[13] கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.

[14] மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?

[15] பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.

[16] அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது.

[17] வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.

[18] சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும்.

[19] அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.

[20] அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.

[21] வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.

[22] மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.

[23] ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.

[24] நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.

நீதிமொழிகள் — Chapters