Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:50

[1] என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்.

[2] அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும்.

[3] அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.

[4] அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய்.

[5] உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.

[6] நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.

[7] உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.

[8] அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும்.

[9] நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.

[10] அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும்.

[11] என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே.

[12] ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.

[13] ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

[14] ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது.

[15] அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல.

[16] அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன.

[17] அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை.

[18] அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

[19] யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்;

[20] அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின.

[21] என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள்.

[22] அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும்.

[23] அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; உன் கால்களும் இடறாது.

[24] நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.

[25] திடீரென வரும் பேராபத்திற்கும் கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம்.

[26] யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார்.

[27] நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே.

[28] உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே.

[29] உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே.

[30] ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.

[31] வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.

[32] ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

[33] கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.

[34] பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார்.

[35] ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள்.

நீதிமொழிகள் — Chapters