[1] தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
[2] “ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
[3] நாவு உணவைச் சுவைப்பதுபோல், காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
[4] வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
[5] “யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.
[6] நான் சரியானவனாய் இருந்தபோதிலும், பொய்யனாகவே எண்ணப்படுகிறேன். குற்றமற்றவனாய் இருந்தபோதிலும், அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார்.
[7] தண்ணீர் பருகுவதைப்போல் கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
[8] அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார்.
[9] ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.
[10] “புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். தீமை இறைனுக்கும், அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
[11] மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார்.
[12] இறைவன் அநியாயம் செய்யாமலும், எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
[13] பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்?
[14] அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,
[15] எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.
[16] “உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், நான் சொல்வதற்குச் செவிகொடும்.
[17] நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ?
[18] அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார்.
[19] அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை; ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா?
[20] அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.
[21] “இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
[22] தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு இருளான இடமோ, காரிருளோ இல்லை.
[23] இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை.
[24] இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார்.
[25] ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.
[26] அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார்.
[27] ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள்.
[28] அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.
[29] மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; நாட்டிற்கும், மனிதனுக்கும், அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
[30] அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.
[31] “யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: ‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன்.
[32] நான் காணாதவற்றை எனக்குப் போதியும், நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’
[33] நீர் மனந்திரும்ப மறுக்கும்போது உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ? நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்; நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.
[34] “நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் என்னிடம்,
[35] ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும்,
[36] யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும்.
[37] தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி, இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”