Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:15

[1] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:

[2] “நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.

[3] உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?

[4] உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, உனக்காக பூமி கைவிடப்படுமோ? பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?

[5] “கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.

[6] அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.

[7] அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.

[8] அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.

[9] பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; கண்ணி அவனை இறுக்கிப் பிடிக்கிறது.

[10] சுருக்கு அவனுக்காகத் தரையிலும், பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

[11] எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களை அலையவைக்கும்.

[12] பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.

[13] வியாதி அவன் தோலைத் தின்கிறது; சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.

[14] அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.

[15] அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.

[16] கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.

[17] அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.

[18] அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.

[19] அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.

[20] அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.

[21] தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”

யோபுவின் சரித்திரம் — Chapters