Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:08

[1] பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:

[2] “ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி, கொண்டல் காற்றினால் தன் வயிற்றை நிரப்புவானோ?

[3] பயனற்ற வார்த்தைகளினாலும், மதிப்பற்றப் பேச்சுக்களினாலும் அவன் வாதாடுவானோ?

[4] ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்; இறைவனுக்கு முன்பாக தியானத்தையும் தடைசெய்கிறாய்.

[5] உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது; தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய்.

[6] என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது; உன் உதடுகளே உனக்கு விரோதமாய்ச் சாட்சி கூறுகிறது.

[7] “மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ? மலைகளுக்கு முன்பே நீ உருவாக்கப்பட்டாயோ?

[8] நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ? ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ?

[9] நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்? நாங்கள் பெற்றிராத எந்த நுண்ணறிவை நீ பெற்றிருக்கிறாய்?

[10] தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்; அவர்கள் உன் தகப்பனைவிட வயதானவர்கள்.

[11] இறைவனது ஆறுதல்களும், அவர் தயவாக உன்னிடம் பேசிய வார்த்தைகளும் உனக்குப் போதாதோ?

[12] நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்? உன் கண்களில் ஏன் அனல் தெறிக்கிறது?

[13] இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு இவ்வாறான வார்த்தைகளை நீ பேசுவானேன்?

[14] “தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்? பெண்ணிடத்தில் பிறந்தவன் நேர்மையுள்ளவனாயிருப்பது எப்படி?

[15] இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை; வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால்,

[16] தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும், இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?

[17] “நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்; நான் கண்டதைச் சொல்லவிடு.

[18] ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று, ஒன்றையும் மறைக்காமல் அறிவித்ததைச் சொல்வேன்.

[19] அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது, அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது:

[20] கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்; துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.

[21] திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன; எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள்.

[22] அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்; வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான்.

[23] அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்; இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான்.

[24] வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து, யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன.

[25] ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி, எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான்.

[26] அவன் தடித்த வலிமையான கேடயத்துடன், பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.

[27] “அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது, அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.

[28] அவன் பாழடைந்த பட்டணங்களிலும், கற்குவியலாக நொறுங்கி ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான்.

[29] அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது, அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.

[30] அவன் இருளுக்குத் தப்புவதில்லை; அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும், இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும்.

[31] வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்; அவன் பிரதிபலனைப் பெறமாட்டான்.

[32] அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்; அவனுடைய கிளைகளும் பசுமையாக இருக்காது.

[33] அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.

[34] இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்; இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்.

[35] அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.”

யோபுவின் சரித்திரம் — Chapters